ராம பக்தர்களை கைது செய்வது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி!
ராம பக்தர்களை கைது செய்வது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி!
ADDED : ஜன 02, 2024 06:48 AM

பெங்களூரு: ''ராமஜென்ம பூமி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவான வழக்குகளை மீண்டும் கிளறி, அவர்களை கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். இதன் மூலம் காங்கிரஸ் அரசு, பழிவாங்கும் அரசியல் செய்கிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
ராம பக்தர்களை கைது செய்வதன் மூலம், திப்பு கலாசாரத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இதற்கு முன் காங்கிரஸ் அரசு வந்த போதும், பழி வாங்கும் அரசியல் செய்தது. அப்போதும் ஹிந்து தொண்டர்கள் கொலைகள் நடந்தன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, ராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்யும் வேளைக்காக, மக்கள் காத்திருக்கின்றனர். இத்தகைய நேரத்தில், ராமஜென்ம பூமிக்காக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
ஹூப்பள்ளியில் 25 முதல் 30 ஆண்டு பழைய வழக்கு தொடர்பாக, இரண்டு தொண்டர்களை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், நானும் கூட ராம ஜென்ம பூமி போராட்டத்தில் பங்கேற்றோம். எங்களையும் கைது செய்வார்களா. பழைய வழக்குகளை கிளறுகின்றனர். இது குறித்து போலீஸ் துறைக்கு அரசு உத்தரவிட்டதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் போது, வீடுகளின் முன் விளக்கேற்றும்படி, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு, ராம பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பயத்தை ஏற்படுத்துகிறது.
திப்பு ஜெயந்தி கொண்டாடும் காங்கிரசார், ஸ்ரீராம நவமி கொண்டாடுவரா; நெற்றியில் நாமம் போடுவரா. முதல்வர் சித்தராமையா, சிறுபான்மையினருக்கு நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளார். ஆனால் வறட்சியால் தத்தளிக்கும் விவசாயிகள் மீது அக்கறை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

