ADDED : மார் 16, 2024 11:57 PM

புதுடில்லி : லோக்சபாவுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை, 544 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அளித்தார்.
அவர் கூறியுள்ளதாவது:
லோக்சபாவில் மொத்தமுள்ள, 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் என, இரண்டு தொகுதிகள் உள்ளன.
வன்முறையால் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். இதனால், இங்குள்ள இரண்டு தொகுதிகளுக்கு, ஏப்., 19 மற்றும் 26 என, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதில், இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு முதல் கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அவுட்டர் மணிப்பூர் தொகுதிக்கு சில இடங்களுக்கு முதல் கட்டத்திலும், மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாவது கட்டத்திலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதனால், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை, 544 ஆக காட்டப் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

