அதிக டிக்கெட் வினியோகித்தது ஏன்? ரயில்வேக்கு டில்லி கோர்ட் கேள்வி
அதிக டிக்கெட் வினியோகித்தது ஏன்? ரயில்வேக்கு டில்லி கோர்ட் கேள்வி
ADDED : பிப் 20, 2025 03:03 AM
புதுடில்லி: டில்லி ரயில் நிலையத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான விவகாரத்தில், 'அளவுக்கு அதிகமாக டிக்கெட் வினியோகித்தது ஏன்?' என, ரயில்வே நிர்வாகத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லி ரயில் நிலையத்தில் பிப்., 15 இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா செல்ல காத்திருந்தனர்.
நடைமேடை, 12, 13, 14ல் ஒரே நேரத்தில் பயணியர் குவிந்ததாலும், 'பிரயாக்ராஜ்' என்ற ஒரே பெயரில் இரண்டு ரயில்கள் புறப்பட்டதாலும் நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ரயில் நிலையங்களில் இதுபோன்ற நெரிசல்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி மனுவில் கோரப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி உபாத்யாய், நீதிபதி துஷார் ராவ் கெதலா அடங்கிய அமர்வு, ரயில்வே வாரியத்துக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. நீதிபதிகள் கூறியதாவது:
வழக்கமான ரயில் விபத்தைப் போன்று, இதை சாதாரணமாக கடந்து போக முடியாது. ஏட்டில் உள்ள விதிகளை, மனித உணர்வோடு எளிதாக செயல்படுத்தினாலேயே, விபத்தை தவிர்த்திருக்கலாம்.
ரயில்வே சட்டம் 57-ன் படி, அதிகபட்ச டிக்கெட் வினியோகத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். விபத்து நடந்த நாளில் எத்தனை லட்சம் பேர், ரயில் நிலையத்தில் குவிந்தனர் என தெரியுமா? இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் உட்கட்டமைப்பு கிடையாது.
ஒரு பெட்டியில் எத்தனை பேர் பயணம் செய்ய முடியும்? அந்த அளவுக்கு மேல் மிக அதிகமாக டிக்கெட்டுகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏன்?
இது குறித்து ரயில்வே வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.