விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை? கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை? கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ADDED : மார் 20, 2024 11:49 PM
புதுடில்லி:“டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை?” என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது.
இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத் துறை அனுப்பிய 8 சம்மன்களை அவர் நிராகரித்தார்.
இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த 16ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
இதையடுத்து, 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 9வது சம்மனை கெஜ்ரிவாலுக்கு அனுப்பியது.
இதைத் தொடர்ந்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனுதாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்கி வாதிட்டதாவது:
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்யும் நோக்கத்துடன் அமலாக்கத் துறை அடுத்தடுத்து சம்மன் அனுப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு சட்ட பாதுகாப்பு தேவை. அமலாக்கத் துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராவார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். டில்லி முதல்வரான கெஜ்ரிவால் கிரிமினல் குற்றவாளி அல்ல. அவர் எங்கே ஓட முடியும்? கெஜ்ரிவால் குற்றம் சாட்டப்பட்டவரா? அல்லது சந்தேக நபரா அல்லது சாட்சியா என்பதைக் கூட தெளிவுபடுத்தாமல், விசாரணைக்கு சம்மன் அனுப்புகின்றனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கும் பட்சத்தில் கெஜ்ரிவால் ஏன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த அக்டோபர் 30-ம் தேதி அமலாக்கத் துறை முதல் சம்மன் அனுப்பியுள்ளது. அந்த விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை? தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது என்பது உட்பட பல காரணங்களைச் சொல்லி ஆஜராவதை தவிர்த்துள்ளீர்கள். இப்போது, லோக்சபா தேர்தலை காரணமாக கூறுகிறீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

