ADDED : அக் 15, 2024 05:56 AM

கோலார்: ''ஹூப்பள்ளி கலவரத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாழ்க கோஷமிட்டதை, தேச பக்தர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேச விரோதிகளுக்கு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு துணை போகக்கூடாது,'' என, கோலார் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.பி., முனிசாமி தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்போரே, ஹூப்பள்ளி கலவரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இவர்களை பாகிஸ்தான் ஏஜென்டுகள் என்று தானே சொல்ல முடியும்?
முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர், மக்கள் மத்தியில் நாடகம் ஆடுகின்றனர்.
ஓட்டு அரசியலுக்காக, நாட்டின் எதிரிகளை பாதுகாக்கலாமா? தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக இருந்தால், காங்கிரசை, மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது பா.ஜ., மட்டும் தான். ஊழல் நிறைந்த காங்கிரஸ், கர்நாடகாவில், எந்த ஒரு தேர்தலிலும் இனிமேல் வெற்றி பெறாது. ஆட்சி அதிகாரத்துக்கு வரவே முடியாது.
கவர்னர் நியாயத்துக்கு மதிப்பளிப்பவர். அந்த கலாசாரம் காங்கிரசில் இல்லை.
அம்பேத்கர் பற்றி மேடைகளில் பேசுகிற காங்கிரஸ், அவரின் கொள்கைப்படி நடந்து கொள்ள தெரியாததால் கவர்னருக்கு எதிராக செயல்படுகின்றனர்.
அம்பேத்கருக்கு, முதல்வர் சித்தராமையா மதிப்பளிப்பதாக இருந்தால், எடியூரப்பா போன்று, சித்தராமையா, தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.

