பா.ஜ., பிரச்னைகளில் தலையிடுவது ஏன்? ராஜண்ணாவுக்கு விஜயேந்திரா கேள்வி!
பா.ஜ., பிரச்னைகளில் தலையிடுவது ஏன்? ராஜண்ணாவுக்கு விஜயேந்திரா கேள்வி!
ADDED : பிப் 18, 2025 05:58 AM

துமகூரு: “பா.ஜ.,வில் நடக்கும் பிரச்னைகளில் தலையிடுவதற்கு அமைச்சர் ராஜண்ணா யார்?,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கேள்வி எழுப்பி உள்ளார்.
துமகூரில் உள்ள மடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., - எம்.எல்.ஏ., பசன கவுடா பாட்டீல் எத்னாலுக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு, 72 மணி நேரத்திற்குள் அவர் பதிலளிக்க வேண்டும். வரும் 20ம் தேதிக்குள் அவர் விஷயத்தில் முடிவு கிடைக்கும்.
இந்த விவகாரம் குறித்து, அமைச்சர் ராஜண்ணா அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது பற்றி அறிக்கை வெளியிடுவதற்கு அவர் யார்? ராஜண்ணா, எங்கள் கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவரது அறிக்கைக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கட்சியின் மேலிட தலைவர்கள், எப்போது வேண்டுமானாலும் மாநிலத்திற்கு வரலாம். அனைத்து எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி சரியான முடிவை எடுப்பர். அனைத்து விஷயங்களையும் கட்சி மேலிடம் கண்காணித்து வருகிறது.
பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், காங்கிரஸ் ஆட்சியில் மூடப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முடிவுகள், மாநில அரசுக்கு நல்லது அல்ல. இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க கூடியவை. இப்போதாவது மாநில அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.
வாக்குறுதித் திட்டங்கள் எல்லாம் சாத்தியமில்லை. அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். நம் நாட்டின் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அதற்காக இரவும், பகலும் உழைக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மரியாதை கொடுக்கப்படவில்லை. ஆனால், மோடி ஆட்சியில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். இதற்கு காரணம், பிரதமர் மோடியே.
அனைத்து நாடுகளின் கவனமும் இந்தியா மீது திரும்பி உள்ளது. 19ம் நுாற்றாண்டு ரஷ்யாவினுடையது; 20ம் நுாற்றாண்டு அமெரிக்காவினுடையது; 21ம் நுாற்றாண்டு இந்தியாவினுடையது என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.