பெருச்சாளியை விட்டு விட்டு ஈயை பார்ப்பது ஏன்? காங்கிரஸ் எம்.பி., சுரேஷுக்கு ம.ஜ.த., பதிலடி!
பெருச்சாளியை விட்டு விட்டு ஈயை பார்ப்பது ஏன்? காங்கிரஸ் எம்.பி., சுரேஷுக்கு ம.ஜ.த., பதிலடி!
ADDED : மார் 15, 2024 10:33 PM
பெங்களூரு: பெங்களூரு ரூரல் தொகுதி பா.ஜ., வேட்பாளர் டாக்டர் மஞ்சுநாத்தை பற்றி கிண்டலாக விமர்சித்த காங்., - எம்.பி., சுரேஷுக்கு ம.ஜ,த,, பதிலடி கொடுத்தது.
பெங்களூரின், ஜெயதேவா இதயநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய டாக்டர் மஞ்சுநாத், நடப்பாண்டு ஜனவரி இறுதியில் ஓய்வு பெற்றார்.
இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன். தற்போது அரசியலில் நுழைந்த மஞ்சுநாத், பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளர் சுரேஷை எதிர்த்து பா.ஜ., சார்பில் களமிறங்கி உள்ளார்.
புத்திசாலி மருமகன்
இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், 'தேவகவுடாவின் கட்சி சரியில்லை என்பதால், அவரது புத்திசாலி மருமகன் பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளார்' என, கிண்டல் செய்தார்.
சுரேஷுக்கு பதிலடி கொடுத்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ம.ஜ.த., கூறியிருப்பதாவது:
மருமகன் புத்திசாலியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் உங்களை போன்று மற்றவரின் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தவறில்லையா? தேவகவுடா கட்சியின் கதை இருக்கட்டும். உங்கள் கட்சியின் தலையெழுத்தை பாருங்கள்.
நாட்டில் காங்கிரசின் நிலையை கூற ஆரம்பித்தால், பெரிய காவியம் ஆகும். உங்கள் தட்டில் பெருச்சாளி விழுந்துள்ளது.
பக்கத்து தட்டில் ஈயை தேடும் முட்டாள் தனம் ஏன்? மஞ்சுநாத் எந்த கட்சி சார்பில் போட்டியிட்டால், உங்களுக்கு என்ன? பெங்களூரு ரூரல் தொகுதியில், அவரை எதிர்கொள்ளுங்கள். தேவையின்றி வாய் சவடால் ஏன்?
தேவகவுடா குடும்பத்தை பற்றி பேசும் அருகதை, உங்களுக்கு இல்லை. கர்நாடக காங்கிரஸ், உங்களின் கைப்பிடியில் சிக்கியுள்ளது. அண்ணன், துணை முதல்வர்;
பேமிலி பேக்கேஜ்
தம்பி, எம்.பி.; சகோதரியின் கணவர் எம்.எல்.சி.; மற்றொருவர் குனிகல் எம்.எல்.ஏ., இது என்ன பேமிலி பாலிடிக்சா அல்லது பேமிலி பேக்கேஜா? நீங்கள் இதை எப்படி அழைக்கிறீர்கள்?
மருத்துவ துறையில் எல்லையற்ற சேவை செய்து, லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சுநாத். இவரை பற்றி தரக்குறைவாக அவப்பிரசாரம் செய்கிறீர்கள்.
தோல்வி பயத்தால் நீங்கள் அவதிப்படுவது, நன்றாக தெரிகிறது. நீங்கள் எப்படிப்பட்டவர், டாக்டர் மஞ்சுநாத் எப்படிப்பட்டவர் என்பது, மாநிலத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே தெரியும். தேவையின்றி பேசி தரம் தாழ்ந்து போகாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

