முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி
முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி
UPDATED : மார் 18, 2024 12:11 PM
ADDED : மார் 18, 2024 11:27 AM

புதுடில்லி: முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்? என எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் முழு விபரங்களை வெளியிடும்படி எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், பத்திரங்களை வாங்கியவரின் பெயர், தொகை, வாங்கப்பட்ட தேதி, எந்த கட்சி அதை பணமாக்கியது உள்ளிட்ட விபரங்களை கடந்த 12ம் தேதிக்குள் அளிக்கும்படி உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த விபரங்களை, தலைமை தேர்தல் ஆணையம், மார்ச் 15ம் தேதிக்குள் தங்கள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் பத்திர விபரங்களை தலைமை தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., சமர்ப்பித்தது. அந்த விபரங்கள் அனைத்தும், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி, தலைமை தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
எஸ்.பி.ஐ.,க்கு என்ன தயக்கம்?
இந்த மனு, இன்று (மார்ச் 18) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?. முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என தெளிவாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீரப்பை நடைமுறைப்படுத்துவதில் எஸ்.பி.ஐ.,க்கு என்ன தயக்கம்?.
அரசியல் கட்சிகள் வழங்கிய விவரங்களை சீலிட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் எஸ்.பி.ஐ., வங்கி நேர்மையாக இருக்க வேண்டும். தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ., வங்கியின் அணுகுமுறை நியாயமானதாக இல்லை. தேர்தல் பத்திர விவரங்களை எந்த பார்மெட்டில் வங்கி பாதுகாத்து வைத்துள்ளது?. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட்டு மார்ச் 21க்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

