நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி
நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி
ADDED : செப் 21, 2024 07:05 AM

மைசூரு: ''எந்த தவறும் செய்யாத நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
குமாரசாமி முதல்வராக இருந்தபோது, கங்கேனஹள்ளியில், 1.11 ஏக்கர் அரசு நிலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. இது திட்டமிட்ட கொள்ளை என வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரகவுடா கூறியுள்ளார்.
யாரை திருப்திப்படுத்த பொய்யான குற்றச்சாட்டை அவர் கூறி உள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் வெளிநாட்டில் படித்தவர்; புத்திசாலியாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் இப்படி யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை பேசுவார் என நினைத்து பார்க்கவில்லை. அவர் என்ன ஹரிச்சந்திரா?
வருவாய் துறையில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்கு தெரியும். கங்கேனஹள்ளி நிலம் தொடர்பான கோப்புகளை, நான் நிராகரித்தேன். இதனால் எனக்கும், எடியூரப்பாவுக்கும் இடையில் எப்படி அரசியல் மோதல் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
நான் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்கின்றனர். எந்த தவறும் செய்யாதபோது, எதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும்? கடந்த மூன்று மாதங்களாக எனக்கு எதிரான ஆவணங்களை, இந்த அரசு சேகரித்து வருகிறது.
பழைய வழக்குகளுக்கு புத்துயிர் கொடுக்க நினைக்கின்றனர். இறந்தவரின் கட்டை விரலில் மையை வைத்து, நிலத்தை அபகரித்தது யார் என துணை முதல்வர் சிவகுமாருக்கு நன்கு தெரியும்.
இப்போது சிலர், ஒக்கலிக சமூகம் மீது அன்பு இருப்பதுபோல் பேசுகின்றனர்.
இதற்கு முன்பு ஒக்கலிக சமூகத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பாதது ஏன்? எஸ்.ஐ.டி., சித்தராமையா, சிவகுமாரின் விசாரணை நிறுவனம் போன்றது. அவர்கள் நடத்துவது விசாரணை இல்லை.
இவ்வாறு அவர்கூறினார்.