'போவி ஆணைய முறைகேடு வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஏன் ஒப்படைக்க கூடாது?'
'போவி ஆணைய முறைகேடு வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஏன் ஒப்படைக்க கூடாது?'
ADDED : டிச 20, 2024 11:02 PM
பெங்களூரு: 'போவி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கை, ஏன் சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கக் கூடாது' என, கர்நாடக அரசுக்கு, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கர்நாடக அரசின் சமூக நலத்துறைக்கு உட்பட்டது போவி மேம்பாட்டு ஆணையம். கடந்த பா.ஜ., ஆட்சியில் ஆணையத்தின் 100 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் பெங்களூரு சித்தாபூரில் இயங்கி வரும் நியூ ட்ரீம்ஸ் என்ற நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்ய கோரி, நிறுவனத்தின் உரிமையாளர் யசஸ்வினி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கல் ஜீவன் வாதாடுகையில், ''போவி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், சி.ஐ.டி., நடத்தும் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. முறைகேடு வழக்குப் பதிந்து 20 மாதங்கள் ஆகியும் வழக்கில் தொடர்புடைய சிலரை விசாரணைக்கு அழைக்கவே இல்லை. அவர்கள் முன்ஜாமின் வாங்காவிட்டாலும் இதுவரை கைது செய்யவில்லை,'' என்றார்.
அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ் கூறுகையில், ''இந்த வழக்கில் ஒருவரை சி.ஐ.டி., கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் விடுவிக்கப்பட்டார்,'' என்றார்.
இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதி நாகபிரசன்னா, ''ஒருவருக்கு தானே ஜாமின் கிடைத்தது. மீதமுள்ளவர்களை ஏன் கைது செய்யவில்லை? பெரிய அளவில் முறைகேடு நடந்து இருந்தாலும், நந்தை மெதுவாக ஊர்ந்து செல்வது போன்று, விசாரணையும் மெதுவாக நடப்பது ஏன்? குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சி நடப்பது போல் தெரிகிறது.
''இந்த வழக்கில் பெண் வக்கீல் ஜீவா தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவானது. இதுவரை அவரை கைது செய்யவில்லை. இது தான் நீங்கள் நடத்தும் விசாரணையா? முறைகேடு வழக்கை மாநில அரசு ஏன் சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கக் கூடாது?,'' என காட்டமாக கேட்டார்.
பின், மனு மீதான அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.