'கடன் மீட்பு தீர்ப்பாய தலைவர்கள் நியமிக்க தாமதம் ஏன்?'
'கடன் மீட்பு தீர்ப்பாய தலைவர்கள் நியமிக்க தாமதம் ஏன்?'
ADDED : நவ 19, 2024 02:22 AM
புதுடில்லி, சென்னை, கோவை உட்பட நாடு முழுதும் 11 கடன் மீட்பு தீர்ப்பாயங்களுக்கு, தலைவர்கள் நியமனத்தில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும், 39 கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட நாடு முழுதும், 11 தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
காலியாக உள்ள, 11 தீர்ப்பாய தலைவர் பதவிகளை நிரப்புவதற்கு கடந்தாண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றொரு தீர்ப்பாயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.
இதனால் வழக்குகள் அதிகம் தேங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. காலியாக உள்ள தீர்ப்பாய தலைவர்கள் பதவிகளை ஏன் விரைவாக நிரப்பவில்லை என்பது குறித்து மத்திய அரசு, ஐந்து வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அதற்கு, மூன்று வாரத்துக்குள் எதிர் தரப்பு பதில் மனு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியது.

