காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக வேலை பார்த்த பிரிட்டன்?
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக வேலை பார்த்த பிரிட்டன்?
ADDED : நவ 09, 2025 11:29 PM

ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்திய உளவு பிரிவால் கொல்லப்பட்டதாக கனடா குற்றம்சாட்டி உள்ள நிலையில், அதற்கான தொலைபேசி உரையாடல் ஆதாரங்களை பிரிட்டன் உளவு அமைப்பு சேகரித்து தந்ததாக தகவல் வெ ளியாகி உள்ளது.
நம் நாட்டின் பஞ்சாப், ஹரியானா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, தனி நாடாக்க வேண்டும் என்ற முயற்சியில் காலிஸ்தான் அமைப்பினர் ஈடுபட்டுஉள்ளனர்.
இதன் காரணமாக, இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த அமைப்பினர் இயங்கி வருகின்றனர்.
இவ்வாறு வட அமெரிக்க நாடான கனடாவில் காலிஸ்தான் தலைவராக இருந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். நம் நாட்டின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த இவர், கடந்த 2023 ஜூன் 18ல் கனடாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய உளவு அமைப்பின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கனடாவின் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், நிஜ்ஜார் கொலை பற்றிய ஆவணப்படம் ஒன்று 'எனிமீஸ் வித்தின்' என்ற பெயரில் 'ப்ளூம்பெர்க்' என்ற இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை கனடா கண்டறிய பிரிட்டன் உளவு அமைப்பு உதவியதாக கூறியுள்ளனர்.
ஆவணப்படத்தில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது:
நிஜ்ஜார் கொலைக்கு பின், இந்தியர்கள் சிலரின் தொலைபேசி உரையாடல்களை பிரிட்டன் உளவு அமைப்பு இடைமறித்து கேட்டது.
உரையாடல்களில், இந்திய உளவுத்துறைக்காக செயல்பட்ட நபர்கள் க னடாவின் ஹர்தீப், பிரிட்டனின் அவதார் சிங், அமெரிக்காவின் பன்னுான் ஆகிய மூன்று இலக்குகளைப் பற்றி விவாதித்தனர்.
பின்னர், நிஜ்ஜார் வெற்றிகரமாக நீக்கப்பட்டார் என்று கூறினர். இந்த தகவல்களை உளவு தகவல்கள் பகிர்வு ஒப்பந்தம் படி கனடாவுக்கு பிரிட்டன் வழங்கியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

