அம்பேத்கர் பெயர் வைக்காதது ஏன்? சித்தராமையாவுக்கு அசோக் கேள்வி!
அம்பேத்கர் பெயர் வைக்காதது ஏன்? சித்தராமையாவுக்கு அசோக் கேள்வி!
ADDED : டிச 20, 2024 05:36 AM

பெங்களூரு: 'அரசு திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை வைக்காதது ஏன்' என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை திரித்து, அம்பேத்கரை காங்கிரஸ் மீண்டும் அவமானப்படுத்துகிறது. அவரை தேர்தலில் தோற்கடித்து, தகனத்திற்கு நிலம் தர மறுத்தவர்கள் தான் காங்கிரசார்.
அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த மாபெரும் வஞ்சகத்தையும், அவமானத்தையும் நாட்டு மக்கள் முன் அம்பலப்படுத்திய அமித்ஷாவின் பேச்சால் காங்கிரஸ் ஏமாற்றம் அடைந்துள்ளது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா என்ற உயரிய விருது கிடைக்க வேண்டும் என்றால், பா.ஜ., அரசால் மட்டுமே அது முடியும்.
பல்லாயிரக்கணக்கான கோடி செலவு செய்து சித்தராம உற்சவம் நடத்துகின்றனர். ஆனால், ஏன் அம்பேத்கர் உற்சவம் நடத்தவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் அம்பேத்கரை நினைவில் வைத்துக் கொள்கின்றனர்.
நாற்காலிக்காகவும், அதிகாரத்திற்காகவும் மேலிட தலைவர்களை மகிழ்விப்பதற்காகவும் குறியாக செயல்படுபவர்களுக்கு, இந்திரா கேன்டீனுக்கு பதிலாக அம்பேத்கர் கேன்டீன் என்ற பெயர் வைக்க வேண்டும் என ஏன் தோன்றவில்லை.
ஆறரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருக்கும் சித்தராமையா, ஏதாவது ஒரு அரசு திட்டத்திற்காவது அம்பேத்கர் பெயரை வைத்தாரா. காங்கிரஸ் தலித் விரோத கட்சி. இவர்களின் நடிப்பை பற்றி மாநில மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.