மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை துண்டு போட்ட மனைவி
மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை துண்டு போட்ட மனைவி
ADDED : ஜன 03, 2025 03:48 AM

பெலகாவி: கர்நாடகாவில், மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்த கணவரை கொன்று, உடலை இரண்டாக வெட்டி வயலில் வீசிய மனைவி கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெலகாவி, சிக்கோடியின் உமராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாளே, 35. இவரது மனைவி சாவித்திரி, 30. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கொடுமை
விவசாய கூலி வேலை செய்யும் ஸ்ரீமந்த், மதுவுக்கு அடிமையானவர். தினமும் குடித்து வந்து மனைவியை அடிப்பார்.
பைக் வாங்க விரும்பிய ஸ்ரீமந்த், பணத்துக்காக பலருடன் உல்லாசமாக இருக்கும்படி மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீமந்த், உல்லாசமாக இருக்க மனைவியை அழைத்தார்.
அவர் மறுத்ததால், தன் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். பொறுமை இழந்த சாவித்திரி, பெரிய கல்லை எடுத்து, கணவரின் மண்டையில் ஓங்கி அடித்ததில், அவர் உயிரிழந்தார்.
விசாரணை
இதையடுத்து, கணவரின் உடலை இரண்டாக வெட்டி, சிறிய டிரம்மில் போட்டு உருட்டியபடியே கொண்டு சென்று, வீட்டின் பக்கத்தில் இருந்த வயலில் வீசினார்.
டிரம்மை கழுவி கிணற்றில் போட்டார். ரத்தக்கறை படிந்த மெத்தை, உடைகளை கல்லைக் கட்டி, கிணற்றில் போட்டார்.  வீட்டுக்கு வந்து ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்து, உடைகளை எரித்து, சாம்பலை குப்பை தொட்டியில் வீசினார். 'நடந்த சம்பவத்தை யாரிடமும் கூற வேண்டாம்' என, பிள்ளைகளிடம் கூறினார்.
நேற்று காலை வயலில் கிடந்த ஸ்ரீமந்த் உடலை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிக்கோடி போலீசார், உடலை மீட்டு விசாரணையில் இறங்கினர். முதலில், சாவித்திரி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
போலீசார் தீவிரமாக விசாரித்த போது, 'மகளை காப்பாற்ற வேறு வழியின்றி கணவரை கொன்றேன். நான் சிறைக்கு சென்றால், பிள்ளைகள் அனாதைகள் ஆவர் என, பயந்து நடந்ததை மறைத்தேன்' என, ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

