ADDED : பிப் 20, 2025 10:23 PM
பஹர்கஞ்ச்: சொத்துப் பிரச்னையில் கூலிப்படையை ஏவி கணவரை கொன்று, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வடக்கு டில்லியின் சக்தி நகர் எப்.சி.ஐ., குடோனுக்கு அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் 3ம் தேதி ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
அவரது கைவிரல் ரேகையை கொண்டு, அவர் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சோனு நாகர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
சோனுவின் மனைவி சரிதாவிடம் இருந்து போலீசார் விசாரணையை துவக்கினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தீவிர விசாரணை நடத்தியதில், சொத்துக்காக கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கூலிப்படையை சேர்ந்த பஞ்சாபின் பக்கா சிங், 19, என்பவரை கைது செய்த போலீசார், அவனது கூட்டாளி குர்பிரீத் என்பவனை தேடி வருகின்றனர்.
கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த சரிதா, அதன் பின் கணவரை காணவில்லை என, குலாபி பாக் போலீசில் புகார் அளித்து நாடகமாடியதும் தெரிய வந்தது.