கணவனை ஆள் வைத்து கொன்ற மனைவி: தாயை காட்டிக்கொடுத்த 8 வயது மகன்
கணவனை ஆள் வைத்து கொன்ற மனைவி: தாயை காட்டிக்கொடுத்த 8 வயது மகன்
ADDED : அக் 17, 2025 02:54 AM
பாரபங்கி: உத்தர பிரதேசத்தில். கணவரை ஆள் வைத்து கொன்றதுடன், விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவியை, அவரது 8 வயது மகன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் பாரபங்கியில் உள்ள குங்ஹெட்டரில், ஹனுமந்த்லால் என்பவர் மனைவி பூஜா மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 13ம் தேதி, குடும்பத்துடன் வெளியே சென்ற அவர், வீட்டிற்கு வரும் வழியில் உயிரிழந்தார்.
தன் கணவர் விபத்தில் இறந்ததாக மனைவி பூஜா போலீசில் புகாரளித்தார். அவர் அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததை அடுத்து, பூஜாவை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிக்க செல்லும் உறவினர்கள் போல் போலீசார் சென்றனர். அங்கிருந்த பலரிடம் விசாரித்த போது, பூஜாவுக்கும், குடும்ப உறவினர் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்தது. இது, தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
ஹனுமந்த்லாலின் 8 வயது மகனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, எலக்ட்ரிக் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் 1 லட்சம் ரூபாய் பணம் தந்து, தந்தையை கொல்ல தாய் பூஜா ஏற்பாடு செய்ததாக 8 வயது சிறுவன் போலீசிடம் தெரிவித்தான்.
இதையடுத்து, பூஜாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று கண்காட்சியை காண சென்று விட்டு, வீடு திரும்பும் வழியில், ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின் பேரில், ஆட்டோ டிரைவர் கமலேஷ் தன் கணவரை கொன்றது குறித்து தெரிவித்தார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவரை கொன்றதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி. எலக்ட்ரிக் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கமலேஷ் மற்றும் பூஜாவை கைது செய்தனர்.