ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: 'வீடியோ' அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்
ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: 'வீடியோ' அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்
ADDED : அக் 17, 2025 05:17 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கிய இளைஞர், டாக்டரை 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டு அவரது உதவியுடன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
இளம்பெண் மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 15ம் தேதி பிரசவத்துக்காக தன் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் மும்பை மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், குழந்தை பிறக்க சில நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.
இதனால், ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஓடும் ரயிலில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் அப்பெண், குழந்தையை பிரசவிக்கும் நிலையை அடைந்துள்ளார்.
இதை பார்த்த சக பயணியான விகாஸ் திலிப், உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
ஜோகேஸ்வரிக்கும், கோரேகாவ்னுக்கும் இடையே உள்ள ராம் மந்திர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
அங்கு டாக்டர்களோ, மருத்துவ வசதியோ, ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை. இதனால் திலிப் உடனே தன் தோழியான டாக்டர் தேவிகா தேஷ்முக்கை, 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டார்.
பாராட்டு அவரின் வழிகாட்டுதல் படி ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே சிறிய தடுப்பு ஏற்படுத்தி அந்த கர்ப்பிணிக்கு திலிப் பிரசவம் பார்த்தார்.
இதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
சரியான நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்ட திலிப்பை மும்பை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.