ADDED : பிப் 04, 2025 11:30 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, மலம்புழா சதுப்பு நிலத்தில் விழுந்த காட்டெருமை உயிரிழந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே உள்ளது ஐயப்பன்பெற்றை. வன எல்லை பகுதியான இங்குள்ள தனியாருக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் காட்டெருமை, விழுந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். காட்டெருமையின் உடலின் பாதிப் பகுதி சேற்றில் புதைந்து கிடந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், காட்டெருமையை காப்பாற்ற நீண்ட நேரம் முயற்சித்தும், பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாலையில் காட்டெருமை இறந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த காட்டெருமைக்கு, 10 வயது இருக்கும். கால்நடை மருத்துவர் டேவிட் ஆப்ரஹாம் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இப்பகுதிகளில் உள்ள வனத்தில் காட்டெருமைகள் அதிகம் இருந்தாலும், இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது குறைவு. ஒரு மாதத்துக்கு முன் வழிதவறி வந்த காட்டெருமையை வனத்தினுள் விரட்டி விட்டோம். தற்போது, சதுப்பு நிலத்தில் உயிரிழந்துள்ளது,' என்றனர்.