பிரதமரின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோவா?: வைரலாகும் புகைப்படம்
பிரதமரின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோவா?: வைரலாகும் புகைப்படம்
ADDED : நவ 28, 2024 07:34 PM

புதுடில்லி: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் பெண் கமாண்டோ ஒருவர் பிரதமருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களின் வைரலாகி வருகிறது.
நாட்டில், பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள், உயரடுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இவர்கள் பிரதமர் எங்கு சென்றாலும் நிழல் போல் இருப்பர்.
எஸ்.பி.ஜி. படையில் துணை ராணுவத்தினர், சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுதப்படை பிரிவினர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில சிறப்பு போலீஸ் படையினர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவில் இருந்து சிறப்பாக பணிபுரிவோர் தக்க பயிற்சி பெற்று பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில் பிரதமரின் எஸ்.பி.ஜி., பாதுகாப்புபடையில் முதன்முறையாக பெண் கமாண்டோ நியமிக்கப்பட்டு பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பா.ஜ., லோக்சபா எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கா ரணாவத் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அது வைரலாகி வருகிறது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 100 பெண் கமாண்டோக்கள் உள்ளனர். பாராளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் பங்கேற்க வந்த போது பெண் கமாண்டோ பாதுகாப்பு பணியில் இருந்தார். அந்த புகைபடம் தான் வைரலாகி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.