ஆங்கில புலமை இல்லாத அதிகாரி திறம்பட பணியாற்றுவாரா: ஐகோர்ட் கேள்வி
ஆங்கில புலமை இல்லாத அதிகாரி திறம்பட பணியாற்றுவாரா: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 27, 2025 12:41 AM

நைனிடால் : ஆங்கில புலமை இல்லாத அதிகாரியால், மாவட்ட நிர்வாக பதவியில் திறம்பட பணியாற்ற முடியுமா? என்பதை கண்டறிந்து கூறும்படி உத்தராகண்ட் மாநில தேர்தல் ஆணையருக்கும், தலைமை செயலருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள புத்லாகோட் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலில் வெளிநபர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இது தவிர, பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்காக, 25க்கும் மேற்பட்ட மனுக்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் வெளியாட்கள் 18 பேரின் பெயர்களை நீக்காமல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குஹநாதன் நரேந்தர் மற்றும் நீதிபதி அலோக் மஹ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதிகள், 'ஆங்கிலத்திற்கு பதில், ஏன் ஹிந்தியில் பதில் அளிக்கப்பட்டது' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், 'ஆங்கிலத்தை அவரால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தாலும், தங்குதடையின்றி பேச முடியாது. எனவே தான் ஹிந்தியை தேர்ந்தெடுத்தார்' என கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கூடுதல் மாவட்ட கலெக்டர் அளவில் பதவி வகிக்கும் ஒருவர், ஆங்கில புலமை இல்லாமல் மாவட்ட நிர்வாக பொறுப்புகளை திறம்பட செய்கிறாரா? என்பதை கண்டறிந்து பதில் அளிக்க வேண்டும். நைனிடாலில் தேர்தல் அதிகாரியாக அவர் பணியாற்றுவதால் இந்த கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் எதன் அடிப்படையில், அந்த தனிப்பட்ட நபர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி ஒருவரது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் அடிப்படையில் தான் வசிப்பிடத்தை உறுதி செய்ய முடியும்.
அவ்வாறு இருக்க குடும்ப பதிவு ஆவணத்தை வைத்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நாளைய தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை செயலர் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.