ADDED : பிப் 16, 2024 03:51 AM

என்.ஏ. நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆங்கிலேயர்களிடம் இந்தியாவும், மக்களும் அடிமையாக இருந்த போது, மக்களை ஓரணியில் திரட்டி, விடுதலை வேண்டி போராட உருவான அமைப்பு தான், காங்கிரஸ்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 'இந்த அமைப்பை கலைத்து விடலாம்' என, மகாத்மா காந்தி கூறிய போது, நேரு அதை ஏற்க மறுத்தார்; விளைவு, காங்கிரஸ் ஆளுங்கட்சியாக மாறியது. நேரு மறைவுக்கு பின், யார் அடுத்த பிரதமர் என்ற போட்டி வந்த போது, தலைவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொருவர் பெயரை பரிந்துரைக்க, அன்று பெருந்தலைவர் காமராஜர் கை காட்டியது, இந்திராவை தான்.
அதன்பின் காங்., கட்சி ராஜிவ், சோனியா, ராகுல் என, நேருவின் பரம்பரை சொத்தாகி போனது. ராஜிவுக்கு பின், சோனியாவை பிரதமராக்க கட்சியினர் முயற்சித்த போது, எதிர்க்கட்சிகளும், மக்களும், 'சோனியா வெளிநாட்டு பிரஜை' என, கடுமையாக எதிர்ப்பு கிளப்ப, மன்மோகன் சிங்கை பிரதமராக்கி, மறைமுகமாக சோனியா குடும்பமே நாட்டை ஆண்டது.
ஆளுங்கட்சியான காங்., பலவீனமான போது, ஆட்சியை பலப்படுத்த கூட்டணி அமைத்தது; அதுவே பலவீனமாகி, ஆட்சியில் பங்கு, கூட்டாட்சி என தரம் தாழ்ந்தது. பின், மாநில கட்சிகளிடம் மண்டியிட்டது என, இன்று வரை சுயமாக எழுந்து நிற்க, காங்கிரஸ் பெரியளவில் முயற்சிக்கவில்லை.
வரும் லோக்சபா தேர்தலில், பல மாநில கட்சிகளின் பலத்தோடு, பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் தோற்கடிக்க, 'இண்டியா' கூட்டணி அமைத்து, களம் காணும் முன், காங்கிரசின் கனவு கலைந்து போனது. காங்கிரஸ், தேசிய அளவில் மக்களிடம் மரியாதை இல்லாமலும், மாநில கட்சிகளிடம் அவமரியாதையோடு, சுயமரியாதை இழந்து நிற்பது பரிதாபமே.
இந்த நிலை நீடித்தால், 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற பா.ஜ.,வின் கோஷம் நிறைவேறி விடும். கட்சி உருப்பட, மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தை ஆளும் கூட்டணி கட்சி செய்யும் ஊழல்களை எதிர்க்க வேண்டும். மவுனமாக இருந்தால், காங்கிரஸ் காணாமல் போவதை தடுக்க முடியாது.
நாட்டை ஆள ஆசைப்படும் ராகுலும், அரசியல் முதிர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும். எதை பேசினாலும், அதில் அர்த்தமும், ஆழமும் இருக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். பொது நலன் கருதி உழைத்தால், போனால் போகுது என, எதிர்காலங்களில் காங்கிரசுக்கு மக்கள் வாய்ப்பு தரலாம்.