ADDED : மார் 06, 2024 04:45 AM

கடந்த 2019 லோக்சபா தேர்தல் நேரத்தில், நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரிஷ் காலமானார். அவர் காங்கிரசில் இருந்ததால், அவரது மனைவி சுமலதாவுக்கு, மாண்டியா தொகுதியில் சீட் கிடைக்கும் என, ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். இவருக்கே சீட் கொடுக்கும்படி, காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் பயனில்லை.
எனவே சுயேச்சையாக போட்டியிடும்படி, சுமலதாவை தொண்டர்கள், ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக சுமலதா களமிறங்கினார்.
நடிகர்கள் பிரசாரம்
இவரை எதிர்த்து, அன்றைய காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசின் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, மொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கினார். அதேபோன்று சுமலதாவுக்கு நடிகர்கள் யஷ், தர்ஷன் பக்கபலமாக நின்றனர்.
பா.ஜ., தொண்டர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் தொண்டர்களும் கூட, சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அம்பரிஷ் மறைவால் ஏற்பட்ட அனுதாப அலையும் சாதகமாக வேலை செய்ததில், சுமலதா அமோக வெற்றி பெற்றார். நிகில் தோல்வி அடைந்தார். முதல்வராக இருந்தும் மகனை வெற்றி பெற வைக்க, குமாரசாமியால் முடியவில்லை.
காங்கிரஸ் கட்சி சீட் தர மறுத்தது, ம.ஜ.த., தனக்கு எதிராக களமிறங்கியது ஆகிய காரணங்களால் எம்.பி.,யான சுமலதா, பா.ஜ.,வுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் இம்முறை பா.ஜ., வேட்பாளராக களமிறங்க ஆர்வம் காண்பிக்கிறார். இவருக்கு சீட் கிடைக்கும் என, தொண்டர்களும் எதிர்பார்த்தனர்.
இதற்கிடையில், எதிர்பாராதவிதமாக ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. ம.ஜ.த., கேட்டுள்ள தொகுதிகளில், மாண்டியாவும் ஒன்றாகும். இது சுமலதாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மாண்டியாவில் தனக்கு சீட் தரும்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, சுமலதா வேண்டுகோள் விடுத்தார்.
“இந்த தொகுதியில் நானே வேட்பாளர்,” என, பகிரங்கமாகவே கூறியுள்ளார். என்ன செய்வது என, தெரியாமல் பா.ஜ., கையைப் பிசைகிறது. மற்றொரு புறம் சுமலதா களமிறங்கினால், இவருக்கு ஆதரவாக நடிகர்கள் யஷ், தர்ஷன் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் தேவையில்லை
சில நாட்களுக்கு முன்பு, ஊடகத்தினர் சந்திப்பில் நடிகர் யஷ், “இம்முறை எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டேன். எனக்கு அரசியல் தேவையில்லை. நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவேன்,” என கூறியுள்ளார்.
எனவே இவரது ஆதரவு, சுமலதாவுக்கு கிடைப்பது சந்தேகம்.
ஆனால் நடிகர் தர்ஷனுக்கும், சுமலதாவுக்கும் தாய், மகன் போன்ற பாசப்பிணைப்பு உள்ளது.
இவரது மகன் அபிஷேக் அம்பரிஷ், தர்ஷனை அண்ணா என்றுதான் அழைக்கிறார். இவர்கள் ஒரே குடும்பம் போன்றவர்கள். சுமலதாவுக்கு தர்ஷன், மூத்த மகனாக பக்கபலமாக நிற்பார் என, கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சுமலதா கூறியதாவது:
தேர்தல் பிரசாரம் குறித்து, யஷ் ஏற்கனவே என்னுடன் ஆலோசனை நடத்தினார். அவர் சினிமா பணிகளில் பிசியாக இருக்கிறார்.
எனவே அவரை பிரசாரத்துக்கு வரும்படி அழைக்க, எனக்கும் விருப்பம் இல்லை. அவர் தன் வேலையை விட்டு விட்டு எப்படி வர முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.

