ADDED : டிச 06, 2024 06:36 AM
பெங்களூரு: கர்நாடக மின் வினியோக நிறுவனங்கள், அடுத்தாண்டு, வாடிக்கையாளர்களுக்கு 'ஷாக்' கொடுக்க திட்டமிட்டு உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரையை, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி உள்ளன.
கர்நாடகாவில் பெஸ்காம் எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனம்; மெஸ்காம் எனும் மங்களூரு மின் வினியோக நிறுவனம்; ஹெஸ்காம் எனும் ஹூப்பள்ளி மின் வினியோக நிறுவனம்; ஜெஸ்காம் எனும் குல்பர்கா மின் வினியோக நிறுவனம், செஸ்காம் எனும் சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் என ஐந்து மின் வினியோக நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கின்றன.
இந்நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, மின் கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரையை, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இந்த நிறுவனங்கள் அனுப்பி உள்ளன.
இது தொடர்பாக பெஸ்காம் அதிகாரி கூறியதாவது:
மின் தேவை அதிகரிப்பையும்; மின் கொள்முதல் செலவை சமாளிக்கவும் மின் கட்டணத்தை உயர்த்த, ஐந்து மின் வினியோக நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான பரிந்துரையை, நவ., 30ம் தேதியே அனுப்பி விட்டோம்.
பெஸ்காம் நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 1 யூனிட்டுக்கு 1.50 ரூபாயும்; மற்ற மின் நிறுவனங்கள் 1 யூனிட்டுக்கு 1.20 ரூபாயும் உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளன. எங்களின் பரிந்துரையை, மின் வினியோக ஒழுங்குமுறை நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அடுத்தாண்டு ஜனவரி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.