இந்திய கிரிக்கெட் அணியில் கர்நாடக வீரர்கள் நிலையான இடம் பிடிப்பரா?
இந்திய கிரிக்கெட் அணியில் கர்நாடக வீரர்கள் நிலையான இடம் பிடிப்பரா?
ADDED : டிச 20, 2024 05:45 AM
கிரிக்கெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில், 4 வயதிலேயே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விடுகின்றனர். அந்த அளவுக்கு கிரிக்கெட் இந்தியாவில் அதிகம் நேசிக்கப்படுகிறது. முன்பு 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அதிகம் நடந்தன. ஆனால் தற்போது 20 ஓவர் கிரிக்கெட்டின் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
போதிய வாய்ப்பு
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இந்திய அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தகுதி, திறமைகள் வாய்ந்த ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் நமது நாட்டில் உள்ளனர். இதையும் மீறி இந்திய அணிக்குள் நுழைந்தால் அதிர்ஷ்டம் தான்.
இந்திய அணியில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இடம் பெறுகின்றனர். தென் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற ஒரு பேச்சு பல ஆண்டுகளாக உள்ளது.
ஆனால் அதையும் மீறி கர்நாடகா, தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திராவில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்து ஜொலித்து உள்ளனர்.
கடந்த 1990 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணியில் கர்நாடகாவை சேர்ந்த ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து ஜொலித்தனர்.
கேப்டன் பொறுப்பு
ஆனால், தற்போதைய இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க முடியாமல் கர்நாடக வீரர்கள் திணறி வருகின்றனர். பெங்களூரை சேர்ந்த ராகுல், இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ளார். ஆனால் 20 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்கிறது.
ஒரு நாள் போட்டிகளில் அவ்வப்போதுதான் வாய்ப்பு வருகிறது. அணியின் கேப்டன் ஓய்வில் இருக்கும் போது ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்துகிறார்.
கர்நாடகாவில் இருந்து தேவதத் படிக்கல், கருண் நாயர், மணிஷ் பாண்டே, பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தற்போது கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். இவர்களுக்கு அவ்வப்போது இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. இதனால், முக்கிய போட்டிகளில் இவர்களை தேர்வாளர்கள் கண்டு கொள்வது இல்லை.
இத்தனைக்கும், இவர்கள் அனைவரும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி எடுப்பவர்கள். உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள். ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக ஓரம் கட்டப்படுகின்றனர். ராகுல் மட்டும் ஏதோ தட்டு தடுமாறி, இந்திய அணியில் அங்கம் வகிக்கிறார்.
'கர்நாடகாவில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை ஐ.பி.எல்., கிரிக்கெட்டின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்து, அவர்களுக்கு விளையாட தொடர்ந்து வாய்ப்பளித்து திறமையை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கர்நாடகாவில் இருந்து இந்திய அணிக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் கிடைப்பர்' என்று, கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
-- நமது நிருபர் --