குபேந்திர ரெட்டிக்கு வெற்றி கிட்டுமா? பா.ஜ., - ம.ஜ.த., தீவிர முயற்சி
குபேந்திர ரெட்டிக்கு வெற்றி கிட்டுமா? பா.ஜ., - ம.ஜ.த., தீவிர முயற்சி
ADDED : பிப் 22, 2024 07:02 AM

பெங்களூரு: ராஜ்யசபா தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை. எனவே வரும் 27ல் ஓட்டுப்பதிவு நடப்பது உறுதியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசின் நாசிர் ஹுசேன், சந்திர சேகர், ஹனுமந்தையா, பா.ஜ.,வின் ராஜிவ் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ல் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு, பிப்ரவரி 27ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ராஜிவ் சந்திரசேகரை, லோக்சபா தேர்தலில் களமிறக்க பா.ஜ., மேலிடம் விரும்பியதால், அவரை ராஜ்யசபா தேர்தலில் களமிறக்கவில்லை. நாராயண கிருஷ்ணாச பந்தகேவுக்கு சீட் கொடுத்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக நாசிர் ஹுசேன், அஜய் மாகன், சந்திரசேகர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில், காங்கிரஸ் மூன்று இடங்கள், பா.ஜ., ஒரு இடத்தை கைப்பற்றலாம். ம.ஜ.த.,விடம் உறுப்பினர் பலம் இல்லை என்றாலும், குபேந்திர ரெட்டியை களமிறக்கிஉள்ளது.
பா.ஜ.,வின் கூடுதல் ஓட்டுகள், காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற வைக்கலாம் என்பது, ம.ஜ.த.,வின் எண்ணம். குபேந்திர ரெட்டியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுவை திரும்பப் பெற, நேற்று முன்தினம் கடைசி நாள். யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை.
எனவே பிப்ரவரி 27ல் ஓட்டுப்பதிவு நடப்பது உறுதி. அன்றே ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவு அறிவிக்கப்படும்.
ஐந்தாவது வேட்பாளராக, ம.ஜ.த.,வின் குபேந்திர ரெட்டி களத்தில் உள்ளார். இதனால் தன் எம்.எல்.ஏ.,க்களை, கூட்டணி கட்சிகள் ஈர்க்க முற்படலாம் என, காங்கிரஸ் அஞ்சுகிறது.
இதற்கிடையில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், கோபாலய்யா, சிவராம் ஹெப்பார் ஆகியோர் தற்போது காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இவர்கள் பா.ஜ., ஆதரவு பெற்ற குபேந்திர ரெட்டிக்கு ஓட்டுப் போடுவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதே காரணத்தால், காங்., - எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை காங்கிரசும் வளைத்து போட முயற்சிக்கின்றன.
கே.ஆர்.பி., கட்சி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, ராஜ்யசபா தேர்தலில் குபேந்திர ரெட்டிக்கு ஓட்டு போட வாய்ப்புள்ளது. ஆனால், லதா மல்லிகார்ஜுனா, புட்டசாமி கவுடா, தர்ஷன் புட்டணய்யா ஆகியோர் காங்கிரஸ் மீது ஆர்வம் காண்பிக்கின்றனர். இவர்களை ஈர்க்கும் முயற்சியில் ம.ஜ.த., ஈடுபட்டுள்ளது.
சட்டசபையில் காங்கிரஸ் - 135; பா.ஜ., - 66; ம.ஜ.த., - 19 எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ளன. மூன்று சுயேச்சைகள், கே.ஆர்.பி.,யின் ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். ராஜ்யசபா தேர்தலில், ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 ஓட்டுகள் வேண்டும்.
பா.ஜ.,வின் நாராயண கிருஷ்ணாச பந்தகேவை தேர்வு செய்த பின், கூடுதல் ஓட்டுகள் ம.ஜ.த.,வின் குபேந்திர ரெட்டிக்கு செல்லும். ம.ஜ.த.,வின் 19 ஓட்டுகளுடன், சுயேச்சைகள், காங்.,கின் சிலரின் ஆதரவு கிடைத்தால், இவர் வெற்றி பெறலாம்.