மோடியின் தொடர் பீஹார் பயணம் சட்டசபை தேர்தலில் பலன் அளிக்குமா?
மோடியின் தொடர் பீஹார் பயணம் சட்டசபை தேர்தலில் பலன் அளிக்குமா?
UPDATED : ஜூன் 22, 2025 06:17 AM
ADDED : ஜூன் 22, 2025 04:17 AM

பாட்னா: பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போதுள்ள அரசின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ளதால், இன்னும் சில மாதங்களில் இங்கு சட்டசபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை வரும் செப்டம்பரில் தேர்தல் கமிஷன் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, அக்டோபர் அல்லது நவம்பரில், இங்குள்ள, 243 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
பிரசாரம்
கடந்த, 2015ல் நடந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது, 2020ல் நடந்த தேர்தலில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வென்றது.
இந்த முறையும், இதே கூட்டணி ஆட்சியில் அமர்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பீஹாரில் முகாமிட்டு வருகிறார்.
பிரதமராக, இதுவரை 50 முறை பீஹாருக்கு விஜயம் செய்துள்ள மோடி, இந்த ஆண்டில் நான்காவது முறையாக நேற்று முன்தினம் பீஹாரில் பிரசாரம் செய்தார்.
கடந்த, 2005 உடன் லாலுவின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான அணியே பீஹாரில் ஆட்சி செய்து வருகிறது.
எனவே, லாலு குடும்பத்தை குறி வைக்காமல், நிதிஷ் செய்த சாதனைகளை மட்டுமே மோடி பேச வேண்டும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதேசமயம், தனக்கு வயதாகி விட்டதாக நிதிஷ் அடிக்கடி கூறி வரும் சூழலில், இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகமும் பா.ஜ.,வை வாட்டி வருகிறது.
வரும் தேர்தலில், பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்க செய்வதும், முதல்வர் வேட்பாளரை நியமிப்பதும் பா.ஜ.,வால் இயலாத காரியம்.
இதை நிதிஷோ, ஐக்கிய ஜனதா தள தொண்டர்களோ விரும்ப மாட்டார்கள்.
இதனாலேயே, பீஹாருக்கு மோடியும், அமித் ஷாவும் அடிக்கடி சென்று வருவதாகவும் கருத்துகள் பரவலாக உள்ளன.
சந்தேகம்
கடந்த முறை போல, ஐக்கிய ஜனதா தளத்தைவிட கூடுதல் இடங்கள் பெற்றால், முதல்வர் பதவிக்கான உரிமை கோரவும் பா.ஜ., முடிவு செய்து உள்ளது.
அக்கட்சியில் முதல்வர் பதவிக்கான உள்மோதல்கள் ஏற்படுவதை தடுக்கவும், நிதிஷின் சீனியாரிட்டியை கருத்தில் வைத்தும் கடந்த முறை அவரையே முதல்வராக்க ஒப்புக்கொண்ட பா.ஜ., இந்த முறை அதை அனுமதிக்குமா என்பது சந்தேகமே.
- நமது சிறப்பு நிருபர் -