ADDED : ஜன 17, 2025 11:14 PM

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் சித்தராமையா விரும்புகிறார். நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு வந்து 20 மாதங்கள் ஆகின்றன. இதுவரை அமைச்சரவையில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பகிரங்கமாக கேட்க ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று, முதல்வர் கவனத்திற்கு சென்று உள்ளது. இதனால் சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். கூடிய விரைவில் டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கவும் முடிவு செய்து உள்ளார்.
கர்நாடக பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.
நாகேந்திரா சிறையில் இருந்து வெளியே வந்த போதே, அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று, சித்தராமையா கூறி இருந்தார். அமைச்சரவையில் மாற்றம் செய்ய மேலிடம் ஒப்புதல் அளித்தால், நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.