செந்தில்பாலாஜி ஜாமின் ரத்தாகுமா? உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
செந்தில்பாலாஜி ஜாமின் ரத்தாகுமா? உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
ADDED : ஆக 12, 2025 09:45 AM

டில்லி சிறப்பு நிருபர்
'தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை, மீண்டும் விசாரிக்க பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2011 - 2015 வரை, போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உள்ளிட்டோர், போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதாக தெரிவித்து, சமரசமாக போக விரும்புவதாக கூறியுள்ளனர். இதை ஏற்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தர்மராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில், குறிப்பிட்ட சில பக்கங்களில், தனக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவை, கீழ் நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவற்றை நீக்கி உத்தரவிட வேண்டும் எனவும், செந்தில்பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, 'செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க பிறப்பித்த உத்தரவின் தீர்ப்பில் உள்ள அம்சங்கள், கீழமை நீதிமன்றத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
மேலும், கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை விரைவாக நடத்தக் கோரியும், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் சேர்த்து, நாளை விசாரிக்கப்படும் என்றும் கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.