UPDATED : அக் 10, 2024 11:50 PM
ADDED : அக் 10, 2024 11:44 PM

சென்னை: கோவில்களை நிர்வகிக்கலாமே தவிர, கோவிலின் நடைமுறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் எதிலும் அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிடவே கூடாது என ஆந்திர மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி முடிந்து, சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்துள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் ஹிந்து கோவில்களை நிர்வாகம் செய்வதில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக நாயுடுக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களில் ஒன்று தான், திருப்பதியில் லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தினர் என்பது.
அது தவிர, பல கோவில்களில் ஹிந்து அல்லாத வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பணியாற்றுகின்றனர்; ஹிந்து அறநிலைய துறையில் பணியாற்றும் அதிகாரிகள், கோவில் நடை முறைகளில் தலையிடுகின்றனர் எனவும் தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
சிறப்பு ஆணையர் வாயிலாக அந்த புகார்கள் அனைத்தையும் விசாரித்து அறிக்கை தர நாயுடு உத்தரவிட்டார். ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு நேற்று முக்கியமான ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஹிந்து கோவில்களின் நிர்வாக பொறுப்பில் உள்ள அறநிலையத் துறை ஆணையர், மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் யாரும், எந்த கோவிலின் வேத, ஆகம மரபுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், நடைமுறைகளில் எந்த வகையிலும் தலையிடவே கூடாது. கோவிலை நிர்வகிப்பது மட்டுமே இந்த துறை அதிகாரிகளின் பொறுப்பு. நிர்வாகம் தவிர ஏனைய விஷயங்களில் குறுக்கிடக் கூடாது.
சடங்குகள், வழிபாட்டு முறைகள், யாகம், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை எப்போது நடத்த வேண்டும்; எவ்வாறு நடத்த வேண்டும்; என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; யார் என்ன பங்காற்ற வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.
அந்த விஷயங்களில் அதிகாரிகள் தலையிடவும் கூடாது. மதம் சார்ந்த இத்தகைய விஷயங்களில் சமய பெரியோர்களின் கருத்துகளை கேட்டு, கோவிலின் அர்ச்சகர்களே முடிவு எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால், அந்தந்த கோவில்களின் மூத்த ஊழியர்களை கொண்ட வைதீக குழுக்களை அமைக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், மடாதிபதிகளின் கருத்துக்களை கேட்கலாம். ஒரே மதமாக இருந்தாலும் எந்த ஒரு பிரிவினரும், தங்களின் நடைமுறைகளை பின்பற்றும்படி மற்றொரு பிரிவினரை கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
கோவில்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அறநிலைய துறை, அந்த வேலையை மட்டும் கவனிக்காமல் கோவில்களை அரசின் சொத்து போல பாவித்து, ஆளும் கட்சியினரை திருப்திப்படுத்த முறைகேடுகள் செய்வதாக நாடெங்கும் புகார்கள் எழுகின்றன.
பக்தர்கள் மனம் புண்படும் விதமாக, கோயில் சடங்குகள் சம்பிரதாயங்களை இஷ்டப்படி மாற்றுவதும் பரவலாக நடக்கிறது. தலைவர்களின் பிறந்த நாள், திருமண நாளை ஒட்டி கும்பாபிஷேக தேதி குறிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட, கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆன்மிக அமைப்புகள் கேட்டு வருகின்றன.
என்றாலும், பூனைக்கு மணி கட்ட எந்தக் கட்சியும் முன்வரவில்லை. முதல் மாநிலமாக ஆந்திரா முதல் அடி எடுத்து வைத்துள்ளது. நாயுடு அரசு இந்த முயற்சியை வெற்றியாக மாற்றினால், மற்ற மாநிலங்களும் பின்பற்றும் என கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நம்புகிறது. ஆந்திர அரசின் உத்தரவை, தமிழகத்தில் உள்ள ஆலய வழிபடுவோர் சங்கம் வரவேற்றுள்ளது. அதன் நிறுவனர் டி.ஆர்.ரமேஷ், இந்த விஷயத்தில் ஆந்திராவை பின்பற்றி தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

