பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் டில்லியில் செயல்படுத்தப்படுமா?
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் டில்லியில் செயல்படுத்தப்படுமா?
ADDED : நவ 28, 2024 08:39 PM
இந்தியா கேட்:டில்லி யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தப்படுவது தொடர்பாக, மாநில அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்ற காப்பீடுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, சமூக, பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வசதி கிடைக்கும்.
இந்தத் திட்டத்தை டில்லி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தவில்லை. இதுதொடர்பாக யூனியன் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பா.ஜ., - எம்.பி., டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தலைநகரில் உள்ள குடிமக்கள், மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தை மீறி செலவு செய்கின்றனர். இதற்காக பலரும் தங்கள் சொத்துக்கள் மீது கடன் வாங்கவோ அல்லது விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தாத ஒரே யூனியன் பிரதேசம், டில்லி. இதனால் குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு கிடைக்காமல் போகிறது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் துணைநிலை கவர்னருக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

