தங்கவயலில் தொழில் வளர்ச்சிக்கு புதிய திருப்பம் ஏற்படுமா?
தங்கவயலில் தொழில் வளர்ச்சிக்கு புதிய திருப்பம் ஏற்படுமா?
ADDED : மார் 16, 2025 11:27 PM

தங்கவயல்: தங்கவயலுக்கு வரும் கர்நாடக அமைச்சர்கள் தங்கவயலில் தொழில் வளம் பெருக ஆய்வு செய்வது, அறிவிப்புகளை வழங்கி நம்ப வைப்பது வழக்கம்.
இந்த வரிசையில் அமைச்சர் பைரதி சுரேஷ் வந்தார், பார்த்தார், சென்றார் என்ற ரீதியில் விமர்சனம் எழுந்து உள்ளது.
தங்கவயல் நகர அபிவிருத்தி குழும தலைவராக இருந்த ஜார்ஜ் வில்சன் அழைப்பின்படி, தங்கவயலில் தொழில் வளம் ஏற்படுத்த, 1991ல் நகர வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜ் தங்கவயலுக்கு வந்தார்.
100 ஏக்கரில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க சரியான இடமாக உள்ளது. புதிய சிறு, குறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றார்.
பேச்சு மட்டும்
நகர அபிவிருத்தி குழும தலைவராக இருந்த ஜெயபால் தலைமையில், 2016ல், நகர வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய அப்போதைய நகர வளர்ச்சி அமைச்சர் ரோஷன் பெய்க் வந்தார்.
உரிகம் முதல் மாரி குப்பம் வரை நேரில் சென்று பார்த்தார். பல தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதாக கூறினார். ஆனால் பேச்சு, பேச்சாகவே இருந்தது.
அவருக்கு பின்னர், 2020ல் பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் வந்தார். சுரங்க பகுதியில் பயன்படுத்தாமல் இருந்த காலி நிலம், சைனாட் மண் மலையை பார்த்தார். பெரிய தொழிற் சாலை ஏற்படுத்த காலம் கனிந்திருப்பதாக தெரிவித்தார்.
அதன் பின், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெமலிடம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் படுத்தாமல் இருக்கிற காலி நிலத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதன்படி மாநில வருவாய்த்துறையிடம் 976 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்கதை
தற்போது இந்த நிலம் தொழில் வளர்ச்சி மேம்பாட்டுத் துறையின் வசம் சென்றுள்ளது. ஓராண்டுக்கு மேலாக திட்ட பேச்சு தொடர் கதையாக உள்ளது.
இதே பிரச்னைக்காக, தற்போதைய கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ், தங்கவயலுக்கு ஓராண்டில் இருமுறை 'விசிட்' செய்தார். நேற்று முன்தினம் மூன்றாவது முறையாக வந்தார்.
'இன்டகிரேட்டட் டவுன் ஷிப்' எனும் ஒருங்கிணைந்த தொழில் நகரம் ஏற்படுத்த, வரைபடங்களுடன் தங்கவயல், பங்கார் பேட்டை தொகுதிகளின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறுகையில், ''பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை 1 கி.மீ., துாரத்தில் அமைவதால் பல்வேறு வெளிநாட்டு கம்பெனிகள் வரும்.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுடன் பல தனியார் நிறுவனங்கள் வரும். பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.
இது மட்டுமின்றி, இன்டகிரேட்டட் டவுன் ஷிப் ஓராண்டில் உருவாகிவிடும் என்று சட்டசபையில் அவர் கூறியதையே மறுபடியும் சொன்னார்.
இந்த திட்டம், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவின் கனவு திட்டம் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ், இத்திட்டம் வருவதற்கு நானும், பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமியும் காரணமானவர்கள் தான் என்று புதுக்கதை எழுதி உள்ளார்.
எப்படியோ, அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியது போல இன்னும் ஓராண்டு காத்திருப்பு என்பது தங்கவயலுக்கு புதிதல்ல. புதிய திருப்பம்... புதிய திருப்பம் என்று எத்தனை முறை சொல்லப் போகின்றனரோ?
நிலம் என்னவோ, அரசுக்கு சொந்தமானது தான். 30 ஆண்டுகள், ஒப்பந்த அடிப்படையில், தனியாரும், பொது கூட்டமைப்பினரும் இணைந்து தொழிற்சாலைகள் அமைக்கப்படுமாம்.
இதுவும் ஒருவகை 'ரியல் எஸ்டேட்' வர்த்தகம் போல் உள்ளது. வந்தனர்; பார்த்தனர்; சென்றனர் என்பதே மக்கள் விமர்சனம்.

