இறந்து கிடந்த போலீஸ் ஐ.ஜி., எழுதிய உயில் கண்டெடுப்பு
இறந்து கிடந்த போலீஸ் ஐ.ஜி., எழுதிய உயில் கண்டெடுப்பு
ADDED : அக் 09, 2025 03:13 AM

சண்டிகர்:ஹரியானாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து கிடந்த ஐ.ஜி., புரான் குமார் எழுதிய உயில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த, 2001ம் ஆண்டு ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்ற புரான் குமார், 52, ஹரியானா மாநில போலீசில் பல்வேறு பதவிகளை வகித்தவர். ரோஹ்தக் மாவட்டம் சுனாரியா போலீஸ் பயிற்சி பள்ளி அதிகாரியாக செப்., 29ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் 1:30 மணிக்கு சண்டிகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து புரான் குமார் இறந்து கிடந்தார். ஐ.ஜி., புரான் குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரது மனைவியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான அம்னீத் ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை செயலராக பதவி வகிக்கிறார்.
முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் அதிகாரிகள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற குழுவில் அம்னீத்தும் இடம் பெற்றிருந்தார்.
புரான் குமார் மரணம் அடைந்த தகவல் உடனடியாக அவருக்கு தெரி விக்கப்பட்டது. ஜப்பான் பயணத்தை ரத்து செய்து உடனடியாக புறப்பட்ட அம்னீத், சண்டிகருக்கு நேற்று வந்தடைந்தார். இதையடுத்து, புரான் குமார் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இரங்கல் தெரிவித்தனர்.
புரான் குமார் உடல் அருகே, உயில் மற்றும் ஒன்பது பக்கங்கள் கொண்ட கடிதம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
அம்பாலா, ரோஹ்தக் மற்றும் குருக்ஷேத்ரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றிய புரான்குமார் பொறியியல் முடித்தவுடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்றவர். வரும் 2033ம் ஆண்டுமே மாதம் பணி ஓய்வு பெறவிருந்தார்.