வடா பாவ்வை மீண்டும் அனுமதிப்பீர்களா? ஆசையாக கேட்ட பள்ளி மாணவன்... துக்காராம் முண்டே கொடுத்த பதில்
வடா பாவ்வை மீண்டும் அனுமதிப்பீர்களா? ஆசையாக கேட்ட பள்ளி மாணவன்... துக்காராம் முண்டே கொடுத்த பதில்
ADDED : அக் 10, 2026 04:31 PM

மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி துக்காராம் முண்டே, உணவு பாதுகாப்பு விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால், அம்மாநிலத்தில் உள்ள உணவகங்கள் சுகாதாரத்தையும், உணவு பாதுகாப்பையும் கடைபிடிக்கத் துவங்கி விட்டன.
குறிப்பாக, பள்ளி கேட்டின்களிலும், பள்ளி வளாகம் அருகிலும் சுகாதாரமற்ற உணவு பண்டங்களை விற்கவும் தடை விதித்துள்ளார். இந்தப் பட்டியலில் மும்பையின் பிரபல தின்பண்டமான வடா பாவ், பர்கர், சமோசா மற்றும் குளிர்பானங்களும் அடங்கும். அதற்கு பதிலாக, இட்லி, தோசை, உப்புமா, பழ ஜூஸ், மோர் போன்றவை விற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவன் ஒருவன், உணவு பாதுகாப்பு அதிகாரி துக்காராம் முண்டேவை சந்தித்து பேசியுள்ளான். அப்போது, 'பள்ளிகளுக்கு அருகே வடா பாவ் விற்பதை நானும், எனது நண்பர்களும் விரும்பி சாப்பிடுவோம். இப்போது, வட பாவ் விற்பது இல்லை. மீண்டும், அது பள்ளிகளுக்கு அருகே விற்க அனுமதிக்கப்படுமா?,' என்று கேட்டான்.
இதற்கு முண்டே பதிலளித்ததாவது; வடா பாவ் சாப்பிடவில்லை என்றால் நமது வாழ்க்கை நின்றுவிடாது. அதற்குப் பதிலாக நல்ல சத்தான உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொரித்த தின்பண்டங்களில் சத்துக்கள் ஏதுமில்லை . எனவே, அவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். உணவின் சுவையை விட ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
