தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தன்னிச்சையாக போராட்டம் நடத்துவதா? ராகுல் மீது 'இண்டி' கூட்டணி அதிருப்தி!

தன்னிச்சையாக போராட்டம் நடத்துவதா? ராகுல் மீது 'இண்டி' கூட்டணி அதிருப்தி!

தன்னிச்சையாக போராட்டம் நடத்துவதா? ராகுல் மீது 'இண்டி' கூட்டணி அதிருப்தி!


UPDATED : அக் 07, 2026 08:26 PM

ADDED : அக் 07, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:26 PM ADDED : அக் 07, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்டும் நிகழ்வாக திட்டமிடப்பட்டிருந்த பேரணியை, தனிப்பட்ட பேரணியாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அவரது சகோதரியும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா மாற்றி விட்டதாக, 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, காங்., சமாஜ்வாதி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி சார்பில், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தை நோக்கி, நேற்று முன்தினம் பேரணி நடந்தது. இதில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.பி.,க்கள் பேரணி சென்ற போது, ஆகாஷ்வாணி பவன் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பஸ்சில் ஏற்றப்பட்டனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், அபிஷேக் பானர்ஜி உட்பட பல எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டு, பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ராகுல், பிரியங்கா, வேணுகோபால், பவன் கெரா ஆகியோர் மட்டும், அருகில் இருந்த ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இறுதியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால், ராகுல், பிரியங்கா ஆகியோரின் தர்ணா மட்டுமே முக்கியத்துவம் பெற்றது. இந்த அறிவிக்கப்படாத தர்ணாவால், இண்டி கூட்டணி நடத்திய பேரணி, ராகுல், -பிரியங்கா போராட்டமாக மாறியது. இது, இண்டி கூட்டணி கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

'ராகுல், பிரியங்கா மட்டும், ஆகாஷ்வாணி பவனில் தர்ணா நடத்த வேண்டிய தேவை என்ன; பின், எதற்காக ஒற்றுமையுடன் இருப்போம் எனக் கூறி பேரணி நடத்த வேண்டும்' என, பல தலைவர்கள் கொந்தளித்து விட்டனர். மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்திக்க அனுமதி கோரிய முடிவையும் கூட, காங்., தன்னிச்சையாக எடுத்ததாக கூறப்படுகிறது. இதுவும் கூட்டணி கட்சி தலைவர்களை அதிருப்தி அடைய செய்தது.

இதை சமாளிக்கவே, டில்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், இண்டி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்., தலைவர் கார்கே நேற்று மதிய உணவு விருந்து அளித்ததாக சொல்லப்படுகிறது. இது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும், தலைவர்களுடனான இணக்கத்தை மீண்டும் உறுதி செய்யவே மதிய உணவு விருந்து அமைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

ராகுல் மீது வழக்கு


டில்லியில், நேற்று முன்தினம் நடந்த பேரணியின் போது, அனுமதியின்றி ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us