குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு; பார்லிமென்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு; பார்லிமென்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ADDED : டிச 19, 2025 12:29 PM

நமது டில்லி நிருபர்
பார்லிமென்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிசம்பர் 19) நிறைவு அடைந்தது. இரு அவைகளும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ம் தேதி தொடங்கியது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்), வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா, நிறைவேற்றப்பட்டது.
அணுசக்தி துறையில், 100 சதவீத தனியார் முதலீட்டை அனுமதிக்கும் 'சாந்தி' மசோதா, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பங்குச்சந்தை விதிகள் மசோதா 2025 உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இன்று (டிசம்பர் 19) லோக்சபா கூடியதும், விபி-ஜி ராம் ஜி மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், ராஜ்யசபாவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு அடைந்தது.

