கேமிங் நிறுவனம் புகார்; கூகுள் மீது விசாரணைக்கு உத்தரவு
கேமிங் நிறுவனம் புகார்; கூகுள் மீது விசாரணைக்கு உத்தரவு
ADDED : நவ 29, 2024 12:19 PM

புதுடில்லி: பிரபல கேமிங் நிறுவனமான வின்ஸோ அளித்த புகாரின் பேரில், கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ.,) உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்ஸோ, நம்பகத்தன்மை விதியை மீறியதாக கூகுள் மீது இந்திய போட்டி ஆணையத்தில் (காம்பெட்டிஷன் கமிஷன்) புகார் அளித்தது. அதாவது, கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்படும் பணம் சார்ந்த ஆன்லைன் கேம் ஆப்களில், வின்ஸோ ஆப் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ஆன்ட்ராய்டு செல்போன்களில் வின்ஸோ ஆப் குறித்து காட்டப்படும் ஆதாரமற்ற எச்சரிக்கைகளினால், நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு கெட்டுப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால், தங்களின் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரவ்னீத் கவுர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, இந்தப் புகார் குறித்து கூகுள் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி, 60 நாட்களுக்கு அறிக்கை சமர்பிக்க சி.சி.ஐ., உத்தரவு பிறப்பித்துள்ளது.போட்டி ஆணையம் என்பது, நிறுவனங்களுக்கு இடையே சமச்சீரான போட்டி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.