ADDED : மே 20, 2025 01:18 AM

லண்டன்:'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறி, ஐந்து ஆண்டுகளாகியுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின.
ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து, பிரிட்டன், 2020ல் வெளியேறியது. தன் பொருளாதார, வர்த்தக வளர்ச்சிக்காக இந்த முடிவை பிரிட்டன் எடுத்தது.
தற்போது, 27 நாடுகள் அடங்கிய, ஐரோப்பிய யூனியனுடன், பிரான்சுக்கு வர்த்தக உறவு உள்ளது. இருப்பினும், பிரெக்சிட் நடைமுறைக்கு வந்தபின், முதல் முறையாக இரு தரப்புக்கும் இடையே விரிவான உறவுக்கான கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக உறவை விரிவுபடுத்துவது உட்பட, ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இது புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், மக்களின் தீர்ப்புக்கு எதிராக, மீண்டும் ஐரோப்பிய யூனியனில் இணையும் வகையில், பிரதமர் ஸ்டாமர் செயல்படுவதாக, பிரிட்டன் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.