விபத்தில் பெண் மூளை சாவு 7 பேருக்கு உடல் உறுப்பு தானம்
விபத்தில் பெண் மூளை சாவு 7 பேருக்கு உடல் உறுப்பு தானம்
ADDED : டிச 26, 2024 06:38 AM

பெங்களூரு: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள், ஏழு பேருக்கு தானம் செய்யப்பட்டன.
கொப்பால் மாவட்டம், பாக்யா நகரைச் சேர்ந்தவர் கீதா, 42. இவரது கணவர் சங்கன்ன கவுடர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தட்சிண கன்னடா மாவட்டம், மூடபித்ரியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார்.
டிச., 15ம் தேதி மகளை பார்த்துவிட்டு, காரில் ஷிவமொக்கா வழியாக வீட்டுக்கு தம்பதி சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் கீதாவின் தாயும் பயணித்தார். அப்போது எதிரே வந்த இன்னோவா கார், இவர்கள் கார் மீது மோதியது. இதில் கீதாவின் தாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சங்கன்ன கவுடர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த கீதா, ஷிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கோமா நிலைக்கு சென்றார். அவரை, பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு 19ம் தேதி அழைத்து வந்தனர்.
இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், இம்மாதம் 23ம் தேதி மாலையில், மூளைச்சாவு அடைந்தார். இத்தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
மனைவியை இழந்த துக்கத்திலும், அவரின் உடல் உறுப்புகளால், மற்றவர்கள் மூலம் அவர் வாழ்வார் என்பதை உணர்ந்த சங்கன்ன கவுடர், மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இது குறித்து டாக்டர்களுக்கும் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகமும் அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து, கீதாவின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், இரு கண்கள் அகற்றப்பட்டு, ஏழு பேருக்கு பொருத்தப்பட்டது.

