வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: திமுக கூட்டணி எதிர்ப்பு: அதிமுக வரவேற்பு
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: திமுக கூட்டணி எதிர்ப்பு: அதிமுக வரவேற்பு
UPDATED : அக் 27, 2025 08:30 PM
ADDED : அக் 27, 2025 07:00 PM

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பணிக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
பீஹாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நவ., 4முதல் டிச., 4 வரை வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன. 2026 பிப்.,7 ல் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
கம்யூ., எதிர்ப்பு
இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒரு மாதத்தில் விண்ணப்பம் கொடுப்பது என்பது சாத்தியம் கிடையாது. எனவே இந்தப்பணியை நிறுத்த வேண்டும் எனக்கூறி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கூட்டணி கட்சிகளின் சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல. நவ.,2 ம் தேதி அனைத்து கட்சிகளையும் அழைத்து அவர்களின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் வாக்கு உரிமையை பாதுகாக்க வேண்டும் என எண்ணம் கொண்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். நவ.,2க்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணியை எதிர்த்து தமிழகம் போர்க்களமாக மாறும் சூழ்நிலை நடக்கும். இதனை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக வரவேற்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது. இதனை வெளிப்படையாக செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

