கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க முடிவு
கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க முடிவு
UPDATED : ஜன 24, 2025 10:23 PM
ADDED : ஜன 24, 2025 02:06 PM

திருவனந்தபுரம்: கேரளா, மானந்தவாடி அருகே மீன் முட்டி கிராமத்தில் புலி தாக்கி அச்சப்பன் என்பவர் மனைவி ராதா, 48, உயிரிழந்தார். புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தோல்வியடையும் பட்சத்தில் புலியை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கேரளா, மானந்தவாடி அருகே மீன் முட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் காபி கொட்டையை அறுவடை செய்தபோது புலி தாக்கியதில் 48 வயது பெண் உயிரிழந்தார். அச்சப்பன் என்பவர் மனைவி ராதா என்பது தெரியவந்தது. காலையில் கணவர் அச்சப்பன் தான் மனைவி ராதாவை தோட்டத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. பின்னர் கணவர் விவசாய நிலத்திற்கு தேடி சென்றுள்ளார். அங்கு, அவர் ராதா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் ராதா புலி தாக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய மானந்தவாடியில் உள்ள வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார்.
மேலும் அவர், 'உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு அரசு ரூ.11 லட்சம் நிதியுதவி வழங்கும். வன விலங்கு தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண அரசு கடுமையாக பாடுபடுகிறது, என்றார்.
இதனிடையே, புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மனிதர்களின் உயர்தான் முக்கியம் எனக்கூறியுள்ள வனத்துறை, புலியை பிடிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அது தோல்வி அடையும் பட்சத்தில் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதலாக கூண்டுகளை வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மானந்தவாடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதிவிரைவுப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், மானந்தவாடி நகராட்சி பகுதியில் காங்கிரஸ் முழு அ டைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.