உ.பி.,யில் பெண் படுகொலை; தேம்பி தேம்பி அழுத எம்.பி.,
உ.பி.,யில் பெண் படுகொலை; தேம்பி தேம்பி அழுத எம்.பி.,
ADDED : பிப் 03, 2025 05:07 AM

அயோத்தி; உத்தர பிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத் தேம்பி தேம்பி அழுதார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஜனவரி 30ம் தேதி இரவு பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
அதன்பின் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிய குடும்பத்தினர், போலீசாரிடம் இது குறித்து புகாரளித்தனர்.
இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் உடல், அப்பகுதியில் உள்ள கால்வாயில் ஆடைகள் ஏதுமின்றி, கால்கள் கட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து, கொலை செய்து உள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பைசாபாத் லோக்சபா தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தேம்பி தேம்பி அழுதார். அருகில் இருந்த கட்சியினர் அவரை சமாதானப்படுத்தினர்.
அதன்பின் அவர் கூறுகையில், “லோக்சபாவில் பிரதமர் முன் இந்த பிரச்னையை நான் எழுப்புவேன். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்வேன். நம் மகள்களை காப்பாற்ற தவறிவிட்டனர். வரலாறு நம்மை எப்படி அடையாளப்படுத்தும்,” என்றார்.

