ADDED : நவ 21, 2024 05:20 AM
பாகல்கோட்: கர்நாடக மாநிலம், பாகல்கோட், இளகல் நகரில் வசித்தவர் பாப்பண்ணா; ராணுவத்தில் பணியாற்றி, 2018ல் ஜம்மு - காஷ்மீரில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவரது மனைவி பசம்மா, 35.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சசிகலா. இவரும், மறைந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தான்.
இரண்டு நாட்களுக்கு முன், சசிகலாவின் வீட்டுக்கு கூரியரில் பார்சல் ஒன்று வந்தது. அப்போது, அவர் வெளியூர் சென்றிருந்தார். அவரை கூரியர் ஊழியர், மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, 'நான் ஆன்லைனில் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை' என்றார்.
ஆனால், அவரது முகவரிக்கு தான் பார்சல் வந்திருந்தது; பணமும் செலுத்தப்பட்டிருந்தது. எனவே பார்சலை, தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பசம்மாவிடம் கொடுக்கும்படி சசிகலா கூறினார். கூரியர் ஊழியரும் பார்சலை கொடுத்துச் சென்றார்.
'பார்சலில் என்ன இருக்கிறது' என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், பசம்மா நேற்று அதை பிரித்தார். அதில் ஹேர் டிரையர் இருப்பது தெரிந்தது. அது எப்படி செயல்படுகிறது என, பார்க்க, சுவிட்ச் பிளக்கில் செருகியபோது, ஹேர் டிரையர் திடீரென வெடித்து சிதறியது.
இதில் பசம்மாவின் இரண்டு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சசிகலா ஆர்டர் செய்யாத நிலையில், அவரது வீட்டுக்கு யார் அந்த பார்சலை அனுப்பினர் என்பது குறித்து, இளகல் போலீசார் விசாரித்தனர். அந்த பார்சல், விசாகப்பட்டினத்தில் இருந்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

