கழிப்பறையை பயன்படுத்த ரூ.800 கட்டணம்; ஹோட்டல் அடாவடியால் பெண் அதிர்ச்சி
கழிப்பறையை பயன்படுத்த ரூ.800 கட்டணம்; ஹோட்டல் அடாவடியால் பெண் அதிர்ச்சி
ADDED : ஏப் 25, 2025 04:52 AM

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஒரு ஹோட்டலில், வெறும் 10 நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்தியதற்கு, பெண்ணிடம் 805 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர்.
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள கது நகரில் 'கது ஷ்யாம் கோவில்' உள்ளது. கது ஷ்யாம், மகாபாரத இதிகாசத்தின்படி, பீமனின் மகன் கடோத்கஜனுக்கும், மவுரவி என்ற பெண்ணுக்கும் பிறந்தவன்.
குருசேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றிக்காக, கிருஷ்ணரின் வேண்டுகோளை ஏற்று, தன் தலையை துண்டித்துக் கொண்டவன். கது ஷ்யாம் அல்லது பார்பரிகா என அழைக்கப்படும் அவனது துண்டிக்கப்பட்ட தலையை சிலையாக வடித்து, இந்த கோவிலில் வணங்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு, டில்லியைச் சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் மேகா உபாத்யாய் என்ற பெண், தன் குடும்பத்துடன் சமீபத்தில் சென்றார். அவரது தாயாரின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்ற, அங்கு சென்ற அவர்கள், கோவிலில் இருந்து 7 கி.மீ., தொலைவில் ஒரு ஹோட்டலில் தங்கினர்.
தரிசனத்துக்காக அதிகாலை 6:00 மணிக்கு கோவிலுக்கு சென்று, வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்தபோது, அவரது தாயாருக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி பிரச்னை ஏற்பட்டதால் கழிப்பறையை தேடினர்.
ஆனால், 1 கி.மீ., சுற்றளவுக்கு சுகாதாரமான கழிப்பறை எதுவுமே இல்லை. இதனால், சற்று தள்ளி இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று, கழிப்பறையை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கும்படி மேகா கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர், 800 ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கூறியதால், மேகா கடும் அதிர்ச்சியடைந்தார்.
தாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் தொலைவில் இருப்பதால், கழிப்பறையை மட்டும் பயன்படுத்துவதாக கெஞ்சி கேட்டும் அவர் ஏற்கவில்லை. வெறும், 5 முதல் 10 நிமிட நேரம் கழிப்பறையை பயன்படுத்தியதற்கு, 805 ரூபாய் வாங்கினார்.
அதற்கு, மேகாவின் தந்தை பில் கேட்டபோது, ஹோட்டல் ஊழியர் சண்டை போட்டுள்ளார். கடைசியாக, வேண்டா வெறுப்புடன் 805 ரூபாய்க்கு ஒரு பில்லை எழுதித் தந்தார்.
இந்த சம்பவத்தை, தன் சமூக வலைதள பக்கத்தில் விவரித்துள்ள மேகா, 'ஒரு பச்சாதாபமோ, பரிதாபமோ, தயக்கமோ இல்லாமல் பணத்தை பறித்தது, இதயத்தை நொறுங்கச் செய்யும் அதிர்ச்சியான செயல்' என குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு, 'ஆன்மிக தலத்தில் இதுபோன்ற சம்பவம் கொடூரமானது என்றும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், கழிப்பறையை தனிநபர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்ற சட்ட விதியை மீறும் செயல்' என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

