ராய்ச்சூர் மருத்துவமனையிலும் பிரசவத்துக்கு பின் பெண்கள் இறப்பு
ராய்ச்சூர் மருத்துவமனையிலும் பிரசவத்துக்கு பின் பெண்கள் இறப்பு
ADDED : டிச 11, 2024 11:36 PM
ராய்ச்சூர் : பல்லாரி, பெலகாவியை தொடர்ந்து, ராய்ச்சூரிலும் பிரசவத்துக்கு பின் ஒரே மாதத்தில் நான்கு தாய்மார்கள் இறந்தது, தாமதமாக வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், கடந்த மாதம் பிரசவத்துக்கு பின், ஐந்து தாய்மார்கள் இறந்தனர். சில நாட்கள் இடைவெளியில் தாய்மார்கள் இறந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்களின் இறப்புக்கு தரமற்ற குளுக்கோஸ் செலுத்தப்பட்டதே காரணம் என்பது, சுகாதாரத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று பெலகாவி அசு மருத்துவமனையிலும், குழந்தை பிறந்த பின், தாய்மார்களின் இறப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களின் பெலகாவியின் வெவ்வேறு மருத்துவமனைகளில், 29 தாய்மார்கள், 322 பச்சிளம் குழந்தைகள் இறந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ராய்ச்சூரிலும் பிரசவத்துக்கு பின் பெண்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. ராய்ச்சூர், சிந்தனுார் தாலுகா மருத்துவமனையில், அக்டோபரில் மட்டுமே நான்கு பெண்கள் இறந்தனர்.
அக்டோபரில் மொத்தம் 300 கர்ப்பிணியர், பிரசவத்துக்காக சிந்தனுார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்தனர்.
இதில் சென்னம்மா, 28, சந்திரகலா, 26, ரேணுகம்மா, 32, மவுஸ்மி, 22, ஆகியோர் இறந்தனர். இது குறித்தும், விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் துவங்கிஉள்ளது.

