பெண்களின் பாதுகாப்புக்காக 'மப்டி 'யில் மகளிர் போலீசார்
பெண்களின் பாதுகாப்புக்காக 'மப்டி 'யில் மகளிர் போலீசார்
UPDATED : டிச 10, 2024 03:56 PM
ADDED : டிச 09, 2024 06:41 AM

பொது இடங்களில் பாலியல் தொல்லை, ஈவ் டீசிங் போன்ற, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடிவாளம் போட, மப்தி உடையில் மகளிர் போலீசார் ரோந்து செல்கின்றனர். இதனால் விஷமிகளின் தொல்லை குறையும்.
பெங்களூரு பெண்களுக்கு பாதுகாப்பான நகர் இல்லை என்ற அவப்பெயர் உள்ளது. பஸ்கள், மெட்ரோ ரயில், மார்க்கெட், ஷாப்பிங் மால் என, அனைத்து இடங்களிலும் பெண்கள் பிரச்னைகளில் சிக்குகின்றனர். பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். சிறுமியர். இளம் பெண்களை விஷமிகள் பின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும், ஆங்காங்கே நடக்கிறது.
ராணி சென்னம்மா
பெங்களூரில் பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. எனவே பெண்களின் பாதுகாப்புக்காக, பெங்களூரு போலீசார் 'ராணி சென்னம்மா படை' அமைக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் போலீசாரை நியமித்துள்ளனர். இவர்கள் கடைகள், பஸ் நிலையங்கள், மால்கள், பள்ளிகள், பப்கள் என, மற்ற பொது இடங்களில், சாதாரண உடையில் நடமாடுகின்றனர்.
பெங்களூரின், தென் கிழக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சாரா பாத்திமா கூறியதாவது:
ஆரம்பத்தில் நிர்ணயித்த பகுதிகளில் மட்டும், ராணி சென்னம்மா படை இயங்கி வந்தது. தற்போது நகரின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுகிறது. மகளிர், குழந்தைகள் உரிமைகள், இவர்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
சென்னம்மா படையில், மகளிர் ஏட்டுகள், ஏ.எஸ்.ஐ.,க்கள் உள்ளனர். தென் கிழக்கு பிரிவில், 17 மகளிர் அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மகளிர் போலீசார் சாதாரண உடையில், பொது மக்களுடன் கலந்து பேசி, அவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்வர். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவர்.
விழிப்புணர்வு
பெண்களின் உரிமைகள், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், 'நம்ம 112' உட்பட, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, பேயிங் கெஸ்ட் மையங்கள், மகளிர் கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு முன் ஆண் போலீஸ் அதிகாரிகள், சாதாரண உடையில் செயல்பட்டனர். இப்போது பெண் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டதால், பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
சாலையில் செல்லும் பெண்கள், சிறுமியரை விஷமிகள் பின் தொடர்வது, ஈவ் டீசிங் செய்வதும் கட்டுப்படுத்தப்படும். இது பெண்களுக்கு தைரியத்தை அதிகரிக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதே, சென்னம்மா படை அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -