ADDED : டிச 13, 2024 05:30 AM

பல்லாரி: பல்லாரி அரசு மருத்துவமனையில் மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று திடீர் வருகை தந்தார். வார்டுகளுக்கு சென்று கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்களிடம் நலம் விசாரித்து, பிரச்னைகளை கேட்டறிந்தார்.
கண்டிப்பு
மருத்துவமனையில் துாய்மை இல்லாததை பார்த்து அதிருப்தி அடைந்தார். குடிநீர் மற்றும் கழிப்பறைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தொட்டி மிகவும் அசுத்தமாக இருந்ததை பார்த்து, ஊழியர்களை கண்டித்தார்.
பின், நாகலட்சுமி சவுத்ரி அளித்த பேட்டி:
பல்லாரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்கள் இறந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் ஏற்புடையதாக இல்லை. இறந்த பெண்களின் பிள்ளைகளின் கல்வி பொறுப்பை, அரசு ஏற்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு, உயர் கல்வி அளித்து, வேலை வாய்ப்பு அளிக்கும் பொறுப்பையும், அரசே ஏற்க வேண்டும்.
குறைந்த விலையை குறிப்பிடும் நிறுவனங்களுக்கு, டெண்டர் அளிக்கும் நடைமுறை ரத்தாக வேண்டும். மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில், சமரசம் கூடாது. இது குறித்து முதல்வருக்கு நான் கடிதம் எழுதி, வேண்டுகோள் விடுப்பேன்.
பல்லாரி மருத்துவமனையில், பல குளறுபடிகள் உள்ளன. இங்குள்ள தண்ணீர் தொட்டிகள் துாய்மையாக இல்லை. குழந்தை பெற்ற பெண்களுக்கு வென்னீர் வசதி இல்லை. கழிப்பறைகளுக்கு கதவுகளே இல்லை. குழாய்கள் இல்லை. மருந்துகளை எழுதி கொடுத்து, வெளியே வாங்கி வரும்படி டாக்டர்கள் அனுப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

