மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள்; எஸ்.பி.ஐ., ஆய்வில் தகவல்
மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள்; எஸ்.பி.ஐ., ஆய்வில் தகவல்
ADDED : ஜன 25, 2025 11:11 AM

புதுடில்லி: மகளிர் உரிமைத் தொகை போன்ற பெண்களுக்கான நிதித் திட்டங்கள் மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கும் வகையில் இருப்பதாக எஸ்.பி.ஐ., வங்கியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இத்திட்டம் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் சமயங்களில் ஓட்டுக்காக இதுபோன்ற திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன.
இந்தத் திட்டங்கள் மாநில நிதி நிலையை பாதிக்கும் வகையில் இருப்பதாக எஸ்.பி.ஐ., வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, 8 மாநிலங்களில் ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்த வருவாயில் இது 3 முதல் 11 சதவீதமாகும்.
அதேவேளையில், அதிக வரி அல்லாத வருவாய் மற்றும் கடன் தேவை இல்லாத ஒடிசா போன்ற மாநிலங்கள் நல்ல நிலையில் இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வருகிறது.
கர்நாடகாவில் கிருஹலட்சுமி யோஜனா திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் ரூ.28,608 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில வருவாயில் 11 சதவீதமாகும். அதேபோல, மேற்கு வங்கத்தில் லக்ஷிமிர் பந்தர் திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுவரையில் ரூ.14,400 கோடி செலவாகிறது. இது அம்மாநில வருவாயில் ரூ.6 சதவீதமாகும்.
தலைநகர் டில்லியைப் பொறுத்தவரையில் முக்யமந்திரி மஹிளா சம்மன் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் 3 சதவீதம் வரை செலவாகிறது.
பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள பெண்களுக்கான இதுபோன்ற திட்டங்களை, அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கும் அழுத்தங்கள் ஏற்படலாம் என்றும் எஸ்.பி.ஐ., ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

