ADDED : டிச 23, 2024 07:04 AM

இரு கிராமங்களை சேர்ந்த 28 பெண்கள் இணைந்து, சிறு தானியங்களை மூல தனமாக வைத்து தொழில் துவங்கி, மாதம் 1.25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
கேட்க ஆச்சரியமாக உள்ளதா, ஆம். பெங்களூரு ஆனேக்கல்லில் உள்ள 'மயூரி வனஸ்ரீ ஸ்த்ரி சக்தி சங்கத்தினர்' தான் இதை நிகழ்த்தி காண்பித்து உள்ளனர்.
பெங்களூரு பன்னரகட்டா தேசிய பூங்கா வனப்பகுதியை ஒட்டி உள்ள கரியப்பனதொட்டி, உஜ்ஜினப்பனதொட்டி கிராமம் உள்ளன. எப்போது யானைகள் தாக்குமோ என்ற அச்சத்துடனும், போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், சிறு தானிய உணவுகளை தயாரித்து, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
28 பெண்கள்
'ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு' என்ற திட்டத்தின் கீழ், 2024 மே மாதம், இவ்விரு கிராமங்களை சேர்ந்த 28 பெண்கள், சிறு தொழில் துவங்கினர்.
இதற்காக, பன்னரகட்டா தேசிய பூங்காவில் ஒரு ஏக்கர் நிலத்தில் குத்தகைக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில் பாதாம் பிஸ்கட், ராகி பிஸ்கட், தினை சாக்லெட், சோள பிஸ்கட், கொண்டைக்கடலை லட்டு, ராகி முறுக்கு, ராகி லட்டு, தினை பக்கோடா, சாம்பார் பொடி, ரசம் பொடி தயாரிக்கின்றனர்.
இவர்களுக்கு, '16 தொட்டி அறக்கட்டளை' ஆதரவாக உள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை, 'பப்பல்லோ பேக் கம்சியூமர்ஸ் பெடரேஷன்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், சந்தைப்படுத்தி தருகிறது.
ஆரோக்கியம்
இங்கு தயாராகும் பொருட்கள், பெங்களூரு நகர் முழுதும் விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை வினியோகிக்கிறது. இது, வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே வேளையில், பெண்கள் குழுவின் பொருளாதாரமும் அதிகரிக்கிறது.
- நமது நிருபர் -

