ADDED : டிச 09, 2024 12:42 AM
சபரிமலை : பம்பையில் நவீன வசதியுடன் பெண்கள் தங்குவதற்கான அறையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று திறந்து வைத்தார்.
10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல முடியாது. சிலர் தெரியாமல் வந்து பம்பையில் பெண் போலீசாரால் தடுக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு சபரிமலையில் சோறு ஊட்டுவதாக வேண்டுதல் உள்ள பக்தர்கள் தம்பதிகளாக வருகின்றனர். பம்பையில் தந்தையிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தாய் அங்கேயே தங்குவார்.
ஆனால் இவர்கள் தங்குவதற்கு போதுமான வசதி இல்லாமல் இருந்தது. ஷெட்டுகளிலும், தாங்கள் வரும் வாகனங்களிலும் இவர்கள் தங்கியிருந்தனர். இதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஆயிரம் சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டது. இதில் பாலூட்டும் அறை, கழிவறை, படுக்கை வசதி, ஏ.சி.,போன்றவை இடம்பெற்றுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று மாலை திறந்து வைத்தார்.