ADDED : அக் 01, 2025 02:39 AM

கவுகாத்தி: உலக கோப்பை தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 59 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சமாரி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சூப்பர் ஜோடி:
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (8) ஏமாற்றினார். இந்திய அணி 43/1 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிரதிகா ராவல் (37), ஹர்லீன் தியோல் (48) ஜோடி நம்பிக்கை தந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (21) நிலைக்கவில்லை. இந்திய அணி 27 ஓவரில், 124/6 ரன் எடுத்து தடுமாறியது.
பின் இணைந்த தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர் ஜோடி அரைசதம் கடந்து அணியை மீட்டது. இந்திய அணி 210/6 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 47 ஓவரில் 269/7 ரன் எடுத்தது. தீப்தி (53), ஸ்னே ராணா (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
தீப்தி அசத்தல்:
இலங்கையின் வெற்றிக்கு 47 ஓவரில் 271 ரன் என 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலக்கு மாற்றப்பட்டது. ஹாசினி (14) சோபிக்கவில்லை. கேப்டன் சமாரி (43), ஹர்ஷிதா (29) ஓரளவு கைகொடுத்தனர். விஷ்மி (11), கவிஷா (15), அனுஷ்கா (6) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்னே ராணா 'சுழலில்' நிலக் ஷிகா (35), சுகந்திகா (10) அவுட்டாகினர். அச்சினி (17), இனோகா (3) நிலைக்கவில்லை.
இலங்கை அணி 45.4 ஓவரில் 211 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. உதேஷிகா (14) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் தீப்தி 3, ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகி விருதை தீப்தி சர்மா வென்றார்.